1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (11:45 IST)

தீபாவளிப் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

தீபாவளிப் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

புத்தாடை, பட்டாசு, இனிப்புடன் தீபாவளிக்கு அதிகம் எதிர்பார்க்கப்படுவது, புதுப்படங்கள். முன்பு ஆறு முதல் எட்டுவரை புதுப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும். இப்போது மூன்று நான்கிற்கே இழுபறி. திரையரங்கு பற்றாக்குறையும், ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதும் தீபாவளி படங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டன.

 
இந்த வருட தீபாவளிக்கு வந்தே தீருவேம் என்று மூன்று படங்கள் முடிவெடுத்துள்ளன. முதலாவது கார்த்தியின் காஷ்மோரா.
 
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் காஷ்மோராவை இயக்கியுள்ளார். 
 
நயன்தாரா நாயகி. வித்தியாசமான பல கெட்டப்புகளில் கார்த்தி நடித்திருக்கும் மெகா பட்ஜெட் படம் இது. பர்ஸ்ட் லுக் என்று கார்த்தி பாகுபலி கட்டப்பா லுக்கில் இருக்கும் படத்தை வெளியிட்டனர். அதுவொரு போர்க் காட்சி. 
 
வெளிநாடுகளில் கணிசமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பல காலகட்டங்களில் நடக்கும் கதை. ஆயிரத்தில் ஒருவன் போலன்றி அனைவரையும் இந்தப் படம் கவர்ந்து கல்லாவை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தீபாவளிக்கு வர்றோம் என்று அறிவித்திருக்கும் இன்னொரு படம், தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் கொடி. இதில் முதல்முறையாக தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். த்ரிஷா இதில் அரசியல்வாதியாக முற்றிலும் புதிய வேடத்தில் நடித்துள்ளது இன்னொரு எதிர்பார்ப்பு. துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
 
தீபாவளியை குறி வைக்கும் மற்றொரு படம், விஷால் நடித்துள்ள கத்திச் சண்டை. சுராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன், சகலகலாவல்லவன் என்று தொடர்ச்சியாக அட்டர் ப்ளாப் படங்களை தந்தவர், கத்திச் சண்டையை எப்படி இயக்கியிருப்பார் என்பது சந்தேகம் தொக்கி நிற்கும் கேள்வி. படம் குறித்த செய்திகளும், புகைப்படங்களும் சுராஜ் இம்மியளவும் மாறவில்லை என்பதையே காட்டுகின்றன. ஆனால், கத்திச் சண்டையை எதிர்பார்க்க வைக்கிற இன்னொரு சமாச்சாரம் படத்தில் இருக்கிறது. நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலு பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். தன்னுடன் சூரியையும் காமெடி செய்ய அனுமதித்திருப்பது இன்னொரு அதிசயம். காமெடி கூட்டணியை நம்பி களம் காணுகிறது கத்திச் சண்டை.
 
சபாஷ் நாயுடு தள்ளிப் போவதால் கமல் விஸ்வரூபம் 2 படத்தை தீபாவளிக்கு கொண்டு வருகிறார் என்று பேச்சு அடிப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு தகவல் இல்லை. தீபாவளிக்கு கமல் படத்தை எதிர்பார்க்க வேண்டாம். 
 
ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் கடவுள் இருக்கிறான் குமாரு, விஜய் ஆண்டனி நடித்திருக்கும் சைத்தான் உள்பட இன்னும் சில படங்கள் தீபாவளிக்கு வர ஆயத்தமாகின்றன. 
 
மூன்றுக்கு மேல் படங்களை திரையிட திரையரங்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.