டெல்லி மட்டும்தான் இந்தியாவா? சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ டிரைலர்..!
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
1964-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உணர்ச்சிகரமான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள, “நாங்கள் இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள், இந்திக்கும் இந்தி பேசுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல” மற்றும் “டெல்லி மட்டும்தான் இந்தியாவா? செந்தமிழை காக்கும் பெரும் சேனை ஒன்று இங்கே உண்டு” போன்ற வசனங்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன் ஒரு தீவிரமான போராட்டக்காரராகவும், தமிழ் உணர்வாளராகவும் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100-வது படம் இது என்பது கூடுதல் சிறப்பாகும். ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் அதர்வா முரளி என பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளது.
பொங்கல் வெளியீடாக ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படம், வரலாற்றை எந்த அளவிற்கு நேர்மையுடன் பதிவு செய்துள்ளது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Edited by Mahendran