1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
  4. 3 crores budget, 3 lakhs collections - Diminish Tamil cinema?

பட்ஜெட் 3 கோடி, வசூல் 3 லட்சம் - நசிகிறதா தமிழ் சினிமா?

பட்ஜெட் 3 கோடி, வசூல் 3 லட்சம் - நசிகிறதா தமிழ் சினிமா?

தமிழ் சினிமா
படம் தயாரிப்பது சூதாட்டமாக மாறியுள்ள நிலையில், தாணு போன்ற பெரிய, அதிகாரமிக்க தயாரிப்பாளர்களே நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அறிமுக தயாரிப்பாளர்களைப் போன்ற உதிரிகளின் நிலை மிக மேசம். 


 
 
போட்ட பணத்தில் ஐந்து சதவீதத்தைக்கூட எடுக்க முடியாத சூழல் தமிழில் நிலவுகிறது.
 
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ். பாலசந்தர், கமல் போன்ற பெரிய ஜாம்பவான்களுடன் பணிபுரிந்தவர். அவர் தனது மகனை நாயகனாக்கி, என்னுள் ஆயிரம் என்ற படத்தை தயாரித்தார். கமல் படத்தின் பாடல்களை வெளியிட்டார். படம் வெளியாகும்வரை மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன்தான் இருந்தார் டெல்லி கணேஷ். ஆனால் இப்போது?
 
டெல்லி கணேஷ் தனது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.
 
வணக்கம்.
 
என்னுள் ஆயிரம் நான் தயாரித்த படம். ஆனால், தமிழகத்தில் இப்படம் எத்தனை திரையரங்கில் வந்துள்ளது என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் ஒரு ரிலீஸ் தேதி முடிவு செய்தால், வேண்டாம் சார் தெறி வருது என்றார்கள். பிறகு அடுத்த வாரம் ரிலீஸ் செய்வதாக முடிவெடுத்தால், ஏன் சார் போன வாரமே ரிலீஸ் செய்திருக்கலாமே என்று சொல்கிறார்கள். மொத்தத்தில் எனக்கு பைத்தியம் பிடித்ததுதான் மிச்சம். ரூபாய் 3 கோடியில் எடுக்கப்பட்ட படம் 3 லட்சம் தான் வசூல் வந்துள்ளது என்றால் என்ன சொல்ல.
 
ஹிந்தி படங்களுக்கும், ஆங்கில படங்களுக்கும் கொடுக்கும் மரியாதை கூட தமிழ்ப் படங்களுக்கு இல்லை. போனது போகட்டும், இத்தனை வருட சினிமா பயணத்தில் இது ஒரு நல்ல பாடம்.
 
- இவ்வாறு டெல்லி கணேஷ் கூறியுள்ளார். 
 
என்னுள் ஆயிரம் மட்டுமில்லை. தமிழில் வெளியாகும் 90 சதவீத படங்களின் நிலை இதுதான். 
 
திரையரங்குகளின் அதிக கட்டணம், பராமரிப்பில்லாத கழிவறைகள், பயமுறுத்தும் பார்க்கிங் கட்டணம் என்று திரையரங்குகள் பார்வையாளர்களின் மனதில் ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளன. அதனால், அறிமுக நடிகர்களின் படங்களுக்கு யாரும் திரையரங்குகளுக்கு செல்வதில்லை. 
 
அதையும் மீறி திரையரங்குகள் இதுபோன்ற படத்தை திரையிட்டாலும், தயாரிப்பாளர்களுக்கான ஷேரை திரையரங்கு உரிமையாளர்கள் தருவதில்லை. சென்னை போன்ற நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ்கள் தவிர பெரும்பாலான திரையரங்குகள் தயாரிப்பாளர்களை ஏமாற்றவே செய்கின்றன. இதில் விநியோகஸ்தர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 
"உன்னோட படத்தை ரிலீஸ் செய்ததால் என் மானம்தான் போச்சு. இதுல பணம் கேட்டு வந்திட்டான்" என்று பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளரை தனது அலுவலகத்துக்கு வெளியே துரத்திய விநியோகஸ்தர்கள் இங்கிருக்கிறார்கள்.
 
இந்த அநியாயங்களுக்கெல்லாம் அடிப்படையும், மூல காரணமும் அரசு திரையரங்குகளின் டிக்கெட் கட்டணத்தில் காட்டும் அலட்சியமே ஆகும். நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் கமிஷனர் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்ட பிறகும் டிக்கெட் கட்டணத்தை ஏற்றி விற்பதை திரையரங்குகள் தொடர்கின்றன. சென்னை உதயம் வளாகத்தில் உள்ள திரையரங்கில் தெறி படத்தின் டிக்கெட்கள் ஆயிரம் ரூபாய்க்கும், ஐநூறு ரூபாய்க்கும் டிக்கெட் கவுண்டரின் அருகிலேயே விற்கப்பட்டன. திரையரங்கு நிர்வாகத்தின் அறிதலுடனே இது நடந்தது. நீதிமன்றம், கவுண்டரில் அதிக கட்டணம் வசூலித்தால்தானே புகார் செய்ய சொன்னது. இது பிளாக் டிக்கெட். இதனை லோக்கர் போலீசாரிடம்தான் எடுத்துச் சொல்ல முடியும். அவர்களோ ஏற்கனவே திரையரங்கு நிர்வாகத்தின் பாக்கெட்டில் உள்ளனர்.
 
பெரிய படங்களுக்கு நடக்கும் இந்த ஊழலின் எதிர்விளைவை என்னுள் ஆயிரம் போன்ற படங்கள் அனுபவிக்கின்றன. டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்தி, அரசு அதனை கண்காணிக்காவிடில் தமிழ் சினிமா வர்த்தகம் படுபாதாளத்தை நோக்கியே செல்லும்.
 
 
 
அடுத்த கட்டுரையில்
படம் எடுத்து பைத்தியக்காரன் ஆகிவிட்டேன் : நடிகர் டெல்லி கணேஷ் புலம்பல்