திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முன்னோர்களின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்கான காரணம் என்ன...?

இந்தியாவின் தேசிய நதி என்று கூறப்படும் கங்கை நதி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாய்கின்றது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி எனும் இடத்தில் பாகீரதி எனும் பெயரில் பிறந்து தேவபிரயாக் என்ற இடத்தில் அலக்நந்தா என்ற நதியுடன் கலந்து ௧ங்கை என பெயர் பெறுகிறது.

இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையில் இந்துக்கள் மட்டுமின்றி சமண, புத்த சமயத்தோரும் தங்களின் வாழ்வின் முக்கிய கடமையாக இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைகின்றனர். அப்படி கரைத்தால் இறந்தவர்கள் சொர்கத்தை அடைகின்றனர் என்று நம்புகின்றனர்.
 
சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரனின் சதியால், தனது புதல்வர்கள் கபிலர் என்ற மகாமுனியின், கோபப்பார்வைக்கு ஆளாகி எரிந்து சாம்பலானார்கள். 
 
தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முக்தியடைந்தான்.
 
ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முக்தி அடையவில்லை. இதற்கு உபாயம் சொன்ன மகான்கள், சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோச்சனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
 
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முக்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வரவேண்டி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார்.
 
இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முக்தியடையச் செய்து வருகின்றனர்.