திங்கள், 30 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோவிலில் உள்ள கொடி மரம் உணர்த்தும் தத்துவம் என்ன...?

கொடி மரம் துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரமும் மிகப்பெரிய தத்துவங்களை தன்னுள் கொண்டுள்ளது.


கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது.
 
கொடி மரத்தின் தண்டு சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம்  அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த  நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். 
 
கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும்  என்பதற்கு விதிகள் உள்ளன.
 
கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். அடிப்பாகம் சதுரமாக இருக்கும். 
 
இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும்.  ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.
 
உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று நம் ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள்  உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.