நவராத்திரிகளின் வகைகளும் அதன் பலன்களும் !!
ஒரு ஆண்டுக்கு 4 நவராத்திரிகள் உள்ளன. ஆஷாட நவராத்திரி - வராகி தேவி, சாரதா நவராத்திரி - துர்கா, லட்சுமி, சரஸ்வதி, சியாமளா நவராத்திரி - இராஜ மாதங்கி தேவி, வசந்த நவராத்திரி - லலிதா திரிபுரசுந்தரி ஆகியவையாகும்.
1. நவராத்திரியின் வகைகள் வசந்த காலத்தில் கொண்டாடப் படுவது வஸந்த நவராத்திரி. (பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
2. ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
3. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).
4. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).
சியாமளா நவராத்திரி இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. சியாமளா' என்றும், 'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.
தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.
வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் 'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே சியாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.