சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை பார்க்க பூமிக்கு வந்த ஆதிசேஷன்...!!

lord shiva
Sasikala|
திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன் என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது.

ஆதிசேஷனின்  பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, ஆதிசேஷா... உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா! என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு. ஆதிசேஷனும் பூலோகத்தில்  பதஞ்சலி முனிவராக அவதரித்தார்.
 
அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர்  பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒருநாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான்,  பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.
Lord Vishnu
திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி படைப்பார்கள். களி என்பது ஆனந்தம் என்று பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று  மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக்  கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.
 
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :