1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவது ஏன்...?

ஆஞ்சநேயர் இருக்கும் ஆலயங்களில் பெரும்பாலும் பிரசாதமாக செந்தூரத்தை வழங்குவார்கள். மேலும் ஆஞ்சநேயர் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசி  ஆராதிப்பதை பார்த்திருக்கிறோம். இதற்கு சுவாரஸ்யமான ஒரு காரணம் உண்டு.

ராமராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அரசவையில் கலந்து கொள்ள சீதா தேவி தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வெள்ளிச் கிழமையிலிருந்து சிறிது செந்தூரத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார்.
 
சீதாதேவியை அரசவைக்கு அழைத்துச் செல்ல ராமனின் சேவகனான அனுமன் இதை கவனித்தார். “தாயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ?” என்று கேட்டார். சீதா தேவியும் “தாராளமாக கேள்” என்றார்..
 
“நீங்கள் ஏன் தினசரி உங்கள் வகிட்டிலும் சிந்தூரை வைத்துக் கொள்கிறீர்கள்” என்றார். “என் கணவர் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக” என்றார்.. சீதா தேவி.
 
பிறகு அனுமன் சீதா தேவியை அரசவை வாயில் வரை சென்று விட்டு விட்டு. “தாயே நீங்கள் செல்லுங்கள் நான் இதோ வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு  சென்று விட்டார்.
 
சில நிமிடங்களில் தன் உடல் முழுவதும் செந்தூரைப் பூசிக் கொண்டு அரசவைக்கு வந்தார் அனுமன். “அனுமா.. இது என்ன கோலம்?” என்று ராமன் கேட்க.. அதற்கு அனுமன்.. “தெய்வமே அன்னை நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் சிறு செந்தூரம் தங்களின் நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றால்… நான்  தங்களின் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் செந்தூரத்தை தினமும் பூசிக் கொள்வேன்” என்றார்.
 
இதைக் கேட்ட ராமனின் கண்கள் அனுமனின் பக்தியையும் வெகுளித்தனத்தையும் நினைத்து கலங்கியது. அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.
 
கடவுளான ராமபிரான் மீது அனுமனின் பக்தியை வெளிப்படுத்தி காட்டவே அனுமன் சன்னதிகளில் செந்தூரத்தை பிரசாதமாகவும், அனுமன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசியும் வழிபடுகின்றனர்.