வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் உண்டான சிறப்புகளும் பலன்களும் !!

ஒரு மாதத்தில் வரும் இரு பிரதோஷ தினங்களிலும், சிவ ஆலயங்களுக்குச் சென்று நந்தி தேவரை முதலில் வழிபட்டு, பின் 'சோம சூக்த பிரதக்ஷணம்' செய்து, பின் நந்தியின் கொம்புகளின் வழி ஈசனை வழிபட வேண்டும்.

நந்தி, தர்மத்தின் வடிவம். அதனால்தான் ஈசனை வழிபடும் போது தர்மத்தின் பின் நின்றே பேச வேண்டும் என்பது அதன் தத்துவம். ஈசனையும் நந்தியையும் அர்ச்சிக்க உகந்தவை வில்வ இலைகள். அந்த வில்வ இலைகளைக் கொண்டு பிரதோஷ நாளில் வழிபட வேண்டும்.
 
வில்வம் அன்னை மகாலட்சுமியின் அம்சம். பாற்கடலில் அன்னை மகாலட்சுமி அவதரித்த போது, அவரின் திருக்கரங்களில் வில்வ இலை இருந்தது என்று வராக புராணம் சொல்கிறது. வில்வ இலைகள், 'இச்சா சக்தி', 'கிரியா சக்தி', 'ஞான சக்தி' ஆகியவற்றைத் தன்னுள்ளே கொண்டவை.
 
ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஒரு தனிச் சிறப்பும் பலனும் கூறப்படுகிறது. இன்று நிகழும் பிரதோஷம், 'சுக்ர வார பிரதோஷம்' என்று போற்றப்படுகிறது. சுக்ரன் என்றால் வெள்ளி. வெள்ளிக்குரிய இந்த நாளில் வரும் பிரதோஷம் ஆதலால் சுக்ரவாரப் பிரதோஷம் எனப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி மற்றும் சிவனுக்கு நிகழும் அபிஷேகங்களைக் கண்டு வழிபடுவது சிறப்பாகும்.
 
இன்று ஈசனுக்கு, மகாலட்சுமியின் அம்சமான வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்ய, கடன் தொல்லைகள் நீங்கும். செல்வ வளம் சேரும் . சிவபெருமானுக்கு பிரதோஷ நாளில் பூஜை என்பது மகோன்னதமானது.சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக் கிழமையில், பிரதோஷம் வருவதும் சுபிட்சம் தருவது. ஐஸ்வர்யம் பெருகும் என்பது உறுதி.
 
சிவனாருக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் சார்த்துங்கள். பிரதோஷ பூஜையைக் கண்ணார தரிசித்தால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.