1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வரலட்சுமி விரதத்தினை எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும் தெரியுமா..?

ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும். சில வருடங்களில் ஆடி மாதத்தில் அமையும். இந்த மாதம் ஆடி 16-ஆம் தேதி ஜூலை 31-ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலி பெண்கள் முதல் நாளன்று வீட்டைச் சுத்தப்படுத்தி மாக்கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து, கோலம் இட்டு,அதன் மீது ஒரு வாழை இலையில் ஒரு படி அரிசியை பரப்பி வைக்க வேண்டும்.

பித்தளை அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, நாணயங்கள், எலுமிச்சை பழம், கருகமணி இவை உள்ள போட வேண்டும். வாசனை பொருட்களும் போடலாம். இந்த கலசத்தின் வாய்பகுதியில் மாவிலை வைத்து அதன் மீது தேங்காய் வைக்க வேண்டும்.
 
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ(அ)வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம் வாசலுக்கு அருகில் அம்மனை இன்று வியாழக்கிழமை இரவே வைத்து விட வேண்டும் நாளை வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
 
வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக "எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வர்யங்களை தந்து அருள்வாயாக!" என்று அம்மனை அழைத்து வந்து வீட்டில் கிழக்கு முகமாக வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு முகமாக அமர்ந்து பூஜிக்க வேண்டும்.
 
அன்னைக்கு பல வகை சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பவர்களுக்கு தனம், தான்யம், ஐஸ்வர்யம், சந்தான பாக்கியம், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுள், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று அன்னை பார்வதி அருளியிருக்கிறார்.
 
மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜை செய்ய வேண்டும். மலர்களால், தீபங்களால் அம்பாளை ஆராதனை செய்து 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவரிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டி விடச் சொல்லி, சரடை கட்டிக் கொண்டு ஆசிர்வாதம் பெற வேண்டும். சுமங்கலி பெண்களுக்கும் நோன்புக்கயிறு கொடுக்க வேண்டும்.