திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

புரட்டாசி மாத விரத வழிபாடுகள்...!

இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு.
நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில்  சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். 
 
சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற  காரணமும் இதுவே.
 
ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால்  சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
 
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப்  படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல்  படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.