சிவனாருக்கு உகந்த பூஜைகளில் முக்கியமான பிரதோஷ பூஜை...!!
சிவனாருக்கு உகந்த பூஜைகளில், பிரதோஷ பூஜை மிக முக்கியமானது. முதன்மையானது. இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும்.
பிரதோஷ நாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே மாலையில், பிரதோஷ நேரத்தில், சிவபெருமானுக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.
அப்போது, அபிஷேகத்தைத் தரிசிப்பதே புண்ணியம். அபிஷேகத்துக்கானப் பொருட்களை வழங்குவது இன்னும் புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே பிரதோஷ நாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.
சிவனாருக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் சார்த்தி பிரதோஷ பூஜையைக் கண்ணார தரிசித்தால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
வியாழக்கிழமை. குருவாரம் என்று வியாழக்கிழமையைச் சொல்லுவார்கள். இது, குரு வார பிரதோஷம். சிவாலயம் சென்று பிரதோஷ பூஜைகளையும் வழிபாடுகளையும், அபிஷேக ஆராதனைகளையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.
முடியாத பட்சத்தில் அன்றைய தினம் உபவாசமிருந்து பிரதோஷ வழிபாட்டை பக்தியுடன் வீட்டிலிருந்து செய்து வழிபடுபடலாம். வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெறுவது உறுதி. இறையருளையும் குருவருளையும் பெற்று வாழலாம்.