திருமண தடையை நீக்கும் பங்குனி உத்திர விரதம்...!!
பங்குனி உத்திர நாளில், 'கல்யாணசுந்தர விரதம்' இருந்து வழிபட்டால், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதுடன், இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்.
பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களில் வழிபாடு செய்து, புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது சுமங்கலிகளின் வழக்கம். சிவபெருமான் அம்பாளைக் கரம்பிடித்த நன்னாளில், பசுவாகிய தங்கள் ஆன்மா, பதியாகிய சிவனை அடைய வேண்டும் என்பதற்காக சிவனடியார்கள், 'கல்யாணசுந்தர விரதம்' அனுஷ்டிப்பார்கள். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திரத் திருநாளில் விரதமிருந்து வழிபட்டால், அடுத்த பிறவியில் தெய்வநிலையை அடைவார்கள் என்பதும் ஐதீகம்.
கல்யாண வரமளிக்கும் இந்த நாளில்தான் திருமகள் விரதமிருந்து திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள். அதைப்போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள். பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான்.
இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது. உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் இந்த நாளில் களையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான். அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு சிறப்படையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில்தான்.