செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரத்தின் சிறப்புக்கள் !!

பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.

இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்களோடு மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.
 
இம்மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது.
 
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்நாளிலே சிவன் - பார்வதி, முருகன் -  தெய்வயானை, ராமர் - சீதை, ஆண்டாள் - ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
 
மேலும் சாஸ்தா, மகாலட்சுமி, அர்ஜூனன் போன்றோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. பெரும்பாலோனோர் தங்களின் குலதெய்வ  வழிபாட்டினையும் இந்நாளில் மேற்கொள்கின்றனர்.
 
தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால் இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது. நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர்.
 
முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது.