ஆவணி மாதத்தில் வரும் பண்டிகைகளும் அதன் பலன்களும் !!
பகவான் கிருஷ்ணன், இந்த ஆவணி மாதத்தில் அஷ்டமி நட்சத்திரத்தில் பூமியில் அவதரித்தார். இந்த நாளை நாம் கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம். பகவான் கண்ணன் அஷ்டமியில் பிறந்து அந்த நட்சத்திரத்துக்கு ஒரு ஏற்றம் தந்துள்ளார்.
கண்ணனை மனதார வேண்டி வாழ்வில் எல்லா வளங்களையும் மக்கள் அடைகின்றனர். பகவான் கண்ணணாகிய தரனை, பக்தி மார்க்கமாக தியானம் செய்தால் நமது வினைகள் அனைத்தும் மாண்டுவிடும் என்கிறார் நம்மாழ்வார்.
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில்தான் விநாயகர் அவதரித்தார். இந்த நாளில்தான் விநாயகர் சதுர்த்தி தினம் மக்களால் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தியென வழிபடுகின்றனர். இந்நாளில் விநாயகரை வணங்கி, சந்திர தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் பொடிப்பொடியாகி விடுவதாக பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆவணி மாதத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. பகவான் விஷ்ணு பாதாள லோகத்தில் இருந்த குதிரை முகம் கொண்ட அசுரர்களிடமிருந்து வேதங்களைக் காப்பதற்காக தானும் குதிரை முகம் வடிவெடுத்து அவர்களை வென்று வேதங்களைக் காத்தார்.
பகவான் குதிரை முகம் வடிவெடுத்ததால் இவரை ஹயக்ரீவர் என்ற திருநாமத்தால் பக்தர்கள் வழிபட்டனர். இவரை வழிபட்டால் கல்வியில் மேன்மை ஏற்படுகிறது. திருவஹிந்திரபுரம், செட்டி புண்ணியம் போன்ற தலங்களில் இந்த ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.