திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆவணி மாதம் இத்தனை சிறப்புக்கள் மிக்கதாக விளங்குவதற்கான காரணம் என்ன...?

சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆவணி மாதம் ஆகும்.  இந்த மாத அதிதேவதை ஸ்ரீதரன் ஆகும். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான இடமாகும். நமக்கு வேண்டிய ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. 

ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணி வரைக்கும் சூரிய ஹோரை இருக்கும். ஆவணி அவிட்டம் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அன்றுதான் பிராமணர்கள் உபாகர்மம் என்னும் பூணூல் வைபவத்தை நடத்துகின்றனர்.
 
சிரவண பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. உபாகர்மா அடுத்த நாள் காயத்ரி ஜபம் மேற்கொள்கின்றனர். ரிக் வேதிகளுக்கு உபாகர்மம் சிராவண மாதத்தில் சிரவண நட்சத்திரம் வரும் நாளாகும். சிராவண மாதம் என்பது ஆடி அமாவாசையிலிருந்து ஆவணி அமாவாசை வரையுள்ள காலம். சிராவண என்பதன் திரிபுதான் ஆவணி. யஜூர் வேதிகளுக்கு உபாகர்மம் என்பது சிராவண மாதப் பௌர்ணமியாகும்.
 
 சாம வேதிகளுக்கு ஒரு மாதம் தள்ளி அஸ்த நட்சத்திரத்தில் உபாகர்மம் மேற்கொள்கின்றனர். அநேகமாக பிள்ளையார் சதுர்த்தியிலோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னேயோ அல்லது பின்னேயோ இருக்கும்.
 
ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல உற்சவம் மிகவும் விமரிசையாக நடத்தப்படுகிறது.
 
 கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, வளையல் விற்ற லீலை, புட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கியது போன்ற திருவிளையாடல் நிகழ்வுகளை மக்கள் விழாக்களாகக் கொண்டாடுகின்றனர். சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
 
ஆவணி மாதத்தில் அவதரித்தவர்களாக விநாயகர், கிருஷ்ணர், சுவாமி தேசிகன் குமாரர் வரதாச்சாரியார், குலச் சிறையார், குங்கிலிய கலய நாயனார், இளையான்குடி மாறனார் ஆகியோர் கருதப்படுகின்றனர்.
 
ஆவணி மாத திருவோண நட்சத்திரம் மகாபலி சக்கரவர்த்திக்கு உகந்த நாளாகக் கூறுகின்றனர். பகவான் வாமன அவதாரம் எடுத்தது இந்த நாள் ஆகும். திரு ஓணம் பண்டிகை இந்த நாளில்தான். மகாபலி சக்கரவர்த்திக்காக வீட்டின் வாசலில் அத்தப் பூக்கோலம் போட்டு புத்தாடை உடுத்தி பல விதமான சுவையான பதார்த்தங்கள் செய்து உறவினர்களுடன் கலந்து மகிழ்ந்து உண்டு பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.