வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கண்திருஷ்டியை போக்கும் எளிய பரிகாரங்கள்....!

கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம். நமக்கோ அல்லது நம் குடும்பத்தில்  இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கும். 
 
புதிய மண் சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண், இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில் கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும்  மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள்.
 
குழந்தையின் திருஷ்டி பாதிப்புக்கள் குறைய செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை  பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு  குறையும்.
 
வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.
 
திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறைய இல்லத்தில் மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு சிகப்பு மீன்களை வளர்க்கலாம். வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்தி  கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.
 
திருஷ்டிக்கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்று முறை அப்பிரதக்ஷிணமாய் சுற்றி பின் தண்ணீரில் போடலாம். தேங்காயினை தலையை சுற்றிய பின் தேங்காயை முச்சந்தியில் போட்டு உடைக்க வேண்டும்.