திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா...?

அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி  தருகின்றாள். அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.

அன்னாபிஷேகம்: அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம்  செய்யப்படுகின்றது. 
 
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி  பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும். 
 
அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொருபாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால்  உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
 
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். இந்நாளில் உபவாசம் இருந்து  மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஷகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.