வியாழன், 14 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 16 மே 2022 (15:26 IST)

மார்கழி மாத திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசனம் காண்பது சிறப்பு ஏன் தெரியுமா...?

Arudra Darisanan
ஒருசமயம் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மாலன், திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டன.


தன்மீது பாந்தமாக படுத்திருக்கும் மாலன் இன்று ஏன் இவ்வளவு மகிழ்வு கொள்கிறார் என நினைத்த ஆதிசேஷன், அதற்கான காரணத்தை திருமாளிடமே கேட்டார். திருவாதிரை திருநாளன்று சிவபெருமான் நடராஜராக ஆடியத் திருத்தாண்டவத்தை நினைத்துப் பார்த்தேன். மகிழ்ச்சியானேன் என்றார் திருமாள்.

பரந்தாமனை இப்படி மகிழ்ச்சி காணச்செய்த அந்தத்  திருநடனத்தை,  தானும் காண வேண்டுமே என நாட்டம் கொண்டான் ஆதிசேஷனும். தன் ஆவலை பரந்தாமனிடம் கூற , திருமாளும் ஆசி கூறி போய் வர அனுமதிக்கிறார்.

ஆதிசேஷன் பாதி முனிவவுருவமும், பாதி சர்ப்பவுருவமுமாக மாறி பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தைக் காண வேண்டி, ஈசனை நினைத்து தவமியற்றினார். பதஞ்சலி முனிவரின் தவம் உச்சஸ்தானம் வரை நீண்டியது. அதனால் அவர் தன்னை (தன் நிலை) மறந்து தவத்திலிருந்தார்.
அப்போது குரலொலி கேட்டு கண்விழித்தார் பதஞ்சலி முனிவர்.

கண் திறந்த போது தன் முன்னே சர்வேசபெருமான் நிற்பதைக்.கண்டார். ஆனந்தித்தார். தாழ் பணிந்தார். தொழுதேத்தினார்.

பதஞ்சலியே! உன்னைப் போன்றே, வியாக்ர பாதனும் திருவாதிரை திருநடனம் காண வேண்டி, என்னை நினைத்து உன் போலும் கடுந்தவம் செய்கிறான்.  எனவே நீங்களிருவரும் தில்லை வந்து திருவாதிரை திருநடனம் கண்டு மகிழ்வீராக! எனக்கூறி மறைந்தார்.

ஈசன் கூறியபடி, பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும்  தில்லை பதிக்குச் சென்றனர். அங்கு வைத்து மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று தன் திருநடனத்தை அவர்களிருவருக்கும் காட்டியருளினார் சிவபெருமான்.

இந்தத் தரிசனமே "ஆருத்ரா தரிசனம்" என அழைக்கப் பெறுகிறது. எனவேதான்  தில்லை சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தைக் காண்பது விஷேசம்.