செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (09:57 IST)

யாருக்காக எதற்காக பீஷ்மாஷ்டமி கடைப்பிடிக்கபடுகிறது தெரியுமா...?

எருக்கம் இலையின் மகத்துவம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. மகாபாரத போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரம் பெற்றவர்.


உத்தராயணத்தில் உயிர் விட வேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருந்து காத்திருந்தார். காலம் போய்க்கொண்டே இருந்தது. பீஷ்மரின் உயிரோ பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், "பீஷ்மா, ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல், இருப்பதும் கூடப் பாவம்தான், அதற்கான தண்டனையை அவரவர்களேதான் அனுபவித்துத் தீர வேண்டும் என்று கூறினார்.

பீஷ்மருக்கு, சபை நடுவே பாஞ்சலியின் உடை களைக் களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதைத் தடுக்காமல் இருந்து மிகப் பெரிய தவறு செய்தது நினைவிற்கு வந்தது.

இதற்கு விமோசனம் இல்லையா என்று கேட்டதற்கு, வியாசர், "எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அப்பாவம் அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனையை அனுபவித்து தானே ஆக வேண்டும" என்றார் வியாசர்.

சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர்,  "அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை. அதேபோல் பிரம்மச்சாரியான உன்னையு ம் இந்த எருக்க இலையால் அலங்க ரிக்கிறேன்" என்றார்.

சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசியன்று உயிர் நீத்தார். பீஷ்மருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர், கவலைப் படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் என்று கூறினார்.

எனவே ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லிய படி  நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும்.

தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி, இந்த அஷ்டமி திதி பீஷ்மாஷ்டமி  என்று அழைக்கப்படுகிறது. அன்று புனித நீர் நிலைக்குச் சென்று  பீஷ்மரு க்கான தர்ப்பணமும், மற்றும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செயதால், சுகமான வாழ்வு நிரந்தரமாக கிட்டும்.