அறுபதாம் கல்யாணம் ஏன் எப்படி செய்யவேண்டும் தெரியுமா?
குடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது 60 ஆண்டுகள் மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு வரமாக கருதுகின்றனர். இதனாலேயே 61-ஆம் வயதில் அந்த ஆண் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளும் சம்பிரதாயம் போற்றப்படுகிறது.
வயதான தங்களின் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று நலம் பெறவும் இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கை செய்கின்றனர்.
சஷ்டியப்தபூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்வது முறையான தொடக்கம் ஆகும். இச்சடங்கை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது உங்கள் வீட்டிலோ செய்து கொள்ளலாம். பிறகு அந்த தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்தபூர்த்தி அல்லது மணிவிழாவிற்கு அழைக்க வேண்டும்.
சஷ்டியப்தபூர்த்தி செய்யும் நாள் அன்று அந்த வயதான தம்பதிகளுக்கு அவர்களின் திருமணத்தின் போது செய்த சடங்குகளை வேதியரின் அறிவுறுத்தலின் படி, குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ரித்துஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்தபூர்த்தி சடங்கை நிறைவு செய்வர்.
நமது பெற்றோருக்கு சஷ்டியப்பூர்த்தி சடங்கை செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும், அவரின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது.