புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தினமும் சிவனுக்கு வில்வம் வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பது சிவ வாக்கு. எளிமை விரும்பியான சிவனின் அர்ச்சனைக்கு உகந்தது வில்வமாகும்.


மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என வில்வத்தில் பல வகைகள் இருக்கின்றது. 
 
மூவிதழ், ஐயிதழ், ஏழு இதழ் என இருந்தாலும் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக வில்வமரத்தின்  இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும்.  
 
வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது. 
 
பொதுவாக, பூஜைக்கு பயன்படுத்திய பூக்கள், பழங்களை மீண்டும் பயன்படுத்தும் வழக்கமில்லை. ஆனால், வில்வ இலையினை மட்டும் ஒருமுறை பூஜைக்கு  பயன்படுத்தி கழுவி மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம். இப்படி ஒரு வில்வத்தையே ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம். 
 
வில்வ மரம் சுத்தமான இடத்தில் வளர்ந்திருந்தால் மட்டுமே அதன் இலைகளை பூஜைக்கு பயன்படுத்தலாம். சுடுகாட்டுக்கு அருகிலோ குப்பைக் கூளங்களுக்கு  அருகிலோ மரம் இருந்தால் அந்த மரத்தின் இலைகளை பயன்படுத்தக்கூடாது.
 
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது சிறப்பு. வில்வத்துக்கு தோஷம் எதும் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். 
 
தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். 
 
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்.