விஜயா ஏகாதசி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் !!
இன்று பங்குனி ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு காரியத் தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.
பங்குனிமாதத்தை மங்கலம் நிறைந்த மாதம் என்றே வர்ணிப்பார்கள். ஏனெனில் இந்த மாதத்தில்தான் தெய்வங்களின் திருமணங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த பங்குனி மாதத்தில் நாம் முறையாக தெய்வங்களை வழிபட்டு வந்தால், நம் வாழ்வில் வரும் பல தடைகளும் விலகும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். இந்த ஏகாதசி இந்த ஆண்டு இன்று (28/3/2022 - திங்கட்கிழமை) வருகிறது.
எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை எல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி மாதம் தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி அன்று, பெருமாளை தரிசிப்பதும், அவருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வதும் மகத்தான பலனை பெற்றுத்தரும்.
ராவணனால் சிறைபிடித்து வைக்கப்பட்டிரு க்கும் சீதையை, இலங்கைக்குச் சென்று எப்படி மீட்பது? என்ற ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார், ராமபிரான். அப்போது அந்த வழியாக வந்த முனிவர் ஒருவர், ராமனிடம் விஜயா ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக்கூறி, அந்த விரதத்தை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்திச் சென்றார்.
அதன்படியே ராமபிரான், விஜயா ஏகாதசி அன்று விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டார். அதன்பலனாக, இலங்கை சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வந்ததாக ஏகாதசி விரத மகாத்மியம் எடுத்துரைக்கிறது.