அவ்வப்போது விரதம் மேற்கொள்வதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!
விரதம் என்றாலே ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதே நம் புரிதலாக உள்ளது. ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளவேண்டும்.
கபம், பித்தம் அதிகம் உள்ளவர்கள், உடலில் அதிகம் மலம் உடையவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், நல்ல உடல் வலிமை உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் உண்ணா நோன்பை மேற்கொள்ள மிகவும் தகுதியானவர்கள். மற்றவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, விரதம் கடைபிடிப்பதே சிறந்தது.
உணவு உண்ணாமையை, மாதத்துக்கு ஒருமுறையாவது கடைப்பிடிப்பது நல்லது. உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, விரதம் மேற்கொள்வதால் அது சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளை நீக்கிவிடும். மேலும், உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும்.
தொண்டை, இதயம், ரத்தம் தூய்மையடையும். ஏனென்றால், உணவு உண்ணாதபோது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்கின்றன.
உடலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டைச் சீராக்குகிறது. ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டுகிறது. குறிப்பாக, பசியைத் தூண்டும் ஹார்மோனான க்ரைலின் சுரப்பைச் சீராக்கி பசியின்மையைப் போக்கும்.
உடலில் உள்ள பிராணவாயு உள்ளிட்ட 10 விதமான வாயுக்களின் செயல்பாட்டைச் சீராக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகள் அதிகரிக்க உதவுகிறது.