வியாழன், 9 ஜனவரி 2025
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Updated : திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (16:45 IST)

சுபாஷ் சந்திர போஸின் போராட்ட வியூகங்கள்

காங்கிரசின் ஒப்பற்ற தலைவராக இருந்த காந்திக்கு வங்காள காங்கிரஸ் இளைஞரணித் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ், பின்னாளில் தலைவலியாக மாறினார். போஸ் கல்கத்தா மேயராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸில் இருந்தாரே ஒழிய போஸைக் காந்தியம் கவரவில்லை. போஸ் அன்று ஐரோப்பாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இரு சித்தாந்தங்களால் கவரப்பட்டார். ஒன்று சோஷலிசம், இன்னொன்று பாசிசம். சுதந்திர இந்தியா "சர்வாதிகார சோஷலிச பாசிச" அரசாக அமையும் என 1930இல் போஸ் உரை ஆற்றினார். அவருக்கு சோஷலிசத்தின் சமத்துவமும் பாசிசத்தின் ஒழுங்குமுறையும் மிகப் பிடித்திருந்தன.
 
போஸ் 1925இல் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு, அந்தமான் சிறையில் வைக்கப்பட்டு டிபியால் பாதிப்பு அடைந்திருந்தார். அதற்கு சிகிச்சை பெற 1933இல் ஐரோப்பா சென்றார். அப்போது ஹிட்லர் எனும் கவர்ச்சிகரமான தலைவன், ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்திருந்தான். இட்லரின் மெய்ன் காம்ப் (mein kampf) போஸுக்கு மிகப் பிடித்திருந்தாலும் அதில் இந்தியர்களை ஹிட்லர் வசைபாடி இருந்தது போஸுக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதை வாபஸ் பெறச் சொல்ல, ஹிட்லரைச் சந்திக்க முயன்றார். அப்போது ஹிட்லரை அவரால் சந்திக்க முடியவில்லை எனினும் "இந்தியர்களை திட்டியது பழைய கதை. அதை நான் மறந்துவிட்டேன்" எனப் பின்னாட்களில் ஹிட்லரை ஒப்புக்கொள்ள வைத்தார் போஸ்.
 

ஹிட்லரைச் சந்திக்க 1933இல் முடியவில்லை எனினும், இத்தாலியை ஆண்ட பெனிட்டோ முசோலினியைச் சந்தித்து, நட்பு பூண்டார் போஸ். ஆனால் விரைவில் ஹிட்லரும் முசோலினியும் முன்வைத்த ஆரிய இனவாதம் போஸுக்குக் கடும் அதிர்ச்சியை அளித்தது. 1936இல் ஹிட்லர் "வெள்ளையரே மாஸ்டர் ரேஸ் (முதன்மை இனம்)" என அறிவித்தபோது அதைக் கடுமையாகக் கண்டித்து, ஜெர்மனி மேல் பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் எனப் பேசினார் போஸ்.
 
1930கள் முடிவுக்கு வருகையில் நாஜிகள் மீதான போஸின் அவநம்பிக்கை, பலமடங்கு பெருகி இருந்தது. போஸின் ஆதர்ச நாடான சோவியத் ரஷ்யா மேல் ஹிட்லர் பகைமை பூண்டதும் அதற்கு ஒரு காரணம். பாசிச அரசை உருவாக்க விரும்பியது தவறு என்றும் பாசிசம் ஒரு சர்வாதிகார தேசியவாதமே என்பதையும் போஸ் பின்னாட்களில் உணர்ந்தார். உள்நாட்டில் அவருக்கு இந்திய மக்களின் பேராதரவு கிடைத்து, காந்திக்கு அடுத்தபடியான செல்வாக்கு மிக்க மக்கள் தலைவர் எனும் பெயரைப் பெற்றார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்றொர் போஸுக்குப் பெருவாரியான ஆதரவை அளித்தார்கள். காங்கிரஸ் அகிம்சையை விட்டு, போஸின் ஆயுதப் போராட்டத்துக்குச் செல்லும் அபாயம் இருப்பதை உணர்ந்த காந்தி, போஸைக் காங்கிரஸ் தலைமைப் பதவியை ஏற்கவிடாமல் தடுக்க முயன்றார். காந்தியின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமய்யாவும், போஸும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதில் போஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றார். பின் காந்திக்கு அதில் விருப்பமில்லை என உணர்ந்து ராஜினாமா செய்து, பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.

மேலும்

இந்தச் சூழலில் இரண்டாம் உலகப் போர் மூண்டதும் பிரிட்டிஷார் இந்தியாவை உலகப் போரில் ஈடுபடுத்தினார்கள். இதைக் கண்டித்து மிகப் பெரும் எதிர்ப்பியக்கத்தைப் போஸ் துவக்கவும் போஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1941இல் சிறையில் இருந்து தப்பி, ஆகாகான் உதவியுடன் ஆப்கானிஸ்தான் வழியே தன் கனவு நாடான ரஷ்யா சென்றார். அப்போது ஜெர்மனியும் ரஷ்யாவும் போரிடவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகி இருந்தது. சோவியத் யூனியன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளும் ஒன்று சேர்ந்து பிரிட்டனுக்கு எதிராகப் போரில் இறங்கி, இந்திய விடுதலைக்குப் போர் தொடங்க வேண்டும் எனப் போஸ் விரும்பினார். ஆனால் ஜோசப் ஸ்டாலினுக்கு இதில் துளி விருப்பமும் இல்லை. சோவியத் யூனியன் மேல் மிகுந்த மனக் கசப்புடன் முன்பு தான் கண்டித்திருந்த ஹிட்லருடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்க்கும் எண்ணத்தில் ஜெர்மனி சென்றார் போஸ்.
 
1941 ஏப்ரலில் போஸை வரவேற்ற ஹிட்லர், ஆப்பிரிக்காவில் பிடிபட்டிருந்த 3000 பிரிட்டிஷ் இந்தியாவின் வீரர்களைப் போஸுக்குக் கொடுத்து, ஐ.என்.ஏவைத் தொடக்கி வைத்தார். அதே 1941 ஜூலையில் ஜெர்மனி, சோவியத் யூனியனுக்கு எதிராகப் போரைத் தொடங்கியது. இது போஸுக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜெர்மனி, இந்தியா மேல் படை எடுக்காது என்பது போஸுக்கு அப்போதுதான் புரிந்தது. ஐ.என்.ஏவை ரஷ்யாவுடன் போர் புரிய ஹிட்லர் ஆணையிட்டபோது போஸ் அதை எதிர்த்தார்.


 
யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் அவருக்கு பேரதிர்ச்சியை அளித்தாலும் அந்தச் சூழலில் அவரால் அதை எதிர்க்க முடியவில்லை. போஸைச் சமாதானப்படுத்த, ரஷ்யாவைப் பிடித்து ஆப்கானிஸ்தான் வழியே இந்தியா மேல் தாக்குதல் தொடுப்பதாக ஹிட்லர் கூறினான். போஸ் அந்தச் சூழலில் ஹிட்லருக்கு அவசியமே இல்லை எனினும் போஸின் கொள்கைப் பிடிப்பும் தலைமைப் பண்பும் ஹிட்லருக்கும் நாஜி ஜெர்மனி அதிகாரிகளுக்கும் பிடித்திருந்தன. ஹிம்லர், கோயபல்ஸ் முதலானோர் போஸை மிகவும் மதித்தார்கள்.
 
நாஜி ஜெர்மனியை நம்ப முடியாது என உணர்ந்த போஸ், ஜப்பான் உதவியுடன் ஆசியாவில் பிரிட்டனுக்கு எதிராகப் போரிட விரும்புவதாகக் கூறி, ஜப்பான் சென்றார். அங்கே மலேசியா, சிங்கப்பூரில் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர்களைக் கொண்டு ஐ.என்.ஏவை மீண்டும் தொடங்கினார். ஆனால் அங்கும் பெயரளவுக்கு மட்டுமே ஜப்பானியர்கள் அவரைச் செயல்பட விட்டார்கள். அந்தமானைப் பிடித்து, அதைப் போஸின் தலைமையில் இயங்கும் சுதந்திரப் பகுதியாக அறிவித்திருந்தாலும் அங்கே இருந்த இந்தியர்களை ஜப்பானியர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். போஸுக்கு ஜப்பானியர்கள் இந்திய கைதிகளுக்கு இழைத்த வரலாறு காணாத கொடுமை தெரியுமா, இல்லையா என்பது இன்னமும் சர்ச்சைக்கு உரியதாகக் கருதப்படுகிறது.
 
போரில் தோற்று மர்மமான முறையில் உயிரிழந்த போஸ், இப்படி தான் நம்பிய வல்லரசு நாடுகள் அனைத்தாலும் கைவிடப்பட்டார். அந்த விதத்தில் அவரது ஆயுதப் போராட்ட முறை தோல்வி அடையும் என்பதைக் காந்தி சரியாகவே கணித்தது, பின்னாட்களில் நிரூபணமானது.