வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

மன்னரின் கேள்வியும், விவேகானந்தரின் விளக்கமும்....!

ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் தத்துவங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மன்னர் விவேகானந்தரை நோக்கி, “சுவாமி,  இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 
உயிரற்ற கற்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை  செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் அல்லவா? கல்லிலும், செம்பிலுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று  நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.
 
உடனே விவேகானந்தர் மன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெறும் வாய்விளக்கமாகக் கூறிப் போக்க முடியாது என்று அவர் நினைத்தார்.
 
வேறு எந்த வழியில் மன்னரின் ஐயத்தைப் போக்குவது என்று யோசித்த விவேகானந்தரின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த மன்னரின் தந்தையின் பெரிய  திருவுருவப் படம் கண்களில் பட்டது.
 
“அது யாருடைய உருவப் படம்?” என்று விவேகானந்தர் வினவினார்.
 
“என் தந்தையின் படம் இது” என்றார் மன்னர்.
 
“இது என்ன படமா? எவ்வளவு அவலட்சணமான உருவம்! இந்தப் படத்தை இந்த இடத்தில் மாட்டி வைத்திருப்பதால் இந்த அறையின் அழகே கெட்டுப்  போய்விடுகிறது. இதைக் கழற்றி சுக்குநூறாக உடைத்துக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள்!” என்று கூறினார் விவேகானந்தர்.
 
அவர் சொன்னதைக் கேட்டு மன்னர் ஆவேசமடைந்து விட்டார்.
 
“சுவாமி… என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்! இதே சொற்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்!  என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவருடைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலாம்?” என்று  ஆர்ப்பரித்தார்.
 
விவேகானந்தரோ மிகவும் நிதானமாக மன்னரை நோக்கி, “மன்னவரே, உமது தந்தை மீது எனக்கு எவ்விதத் துவேஷமும் கிடையாது. அவரை இழிவுபடுத்துவதும் எனது நோக்கமல்ல. தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குவதற்காகவே நான் இவ்வாறு நாடகமாடினேன்.
 
உங்கள் தந்தையாரின் உருவப் படத்துக்கு உயிர் இல்லை. இது ஓர் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்தான். இந்த ஓவியத்தினுள் உங்கள் தந்தை ஒளிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் தந்தை மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மதிப்பு, மரியாதை காரணமாக இதை ஓர் நினைவுச்சின்னமாகப்  போற்றி வருகிறீர்கள். தெய்வத் திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவதன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போது  இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்துவதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன” என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவுபெற்றார்  மன்னர்.