கோவை சிறையில் தான் உனக்கு சமாதி என்று தன்னை மிரட்டுவதாக - சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் வைத்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காவல்துறையினர்களையும் பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் சிறையில் தாக்கப்பட்டதாகவும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டது. இந்நிலையில் மறு சிகிச்சைக்காக மீண்டும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு அந்த பழைய மாவு கட்டு அவிழ்க்கப்பட்டு புதிதாக மாவு கட்டு போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெளியில் அழைத்து வரப்படும் பொழுது சவுக்கு சங்கர் " சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் என் கைகளை உடைத்ததாகவும் கோவை சிறையில் தான் உனக்கு சமாதி" என்று மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை வைத்தபடியே வெளியில் வந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.