வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (03:45 IST)

வானதி சீனிவாசனுக்கு ரோஜா பூ கொடுத்த வாலிபர்! - என்ன சொல்கிறார் வானதி

தமிழக பாஜகவில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர் வானதி சீனிவாசன். சமீபத்தில் இவர் கோவைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, பாஜகவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ரோஜாப்பூவை நீட்டி தனது ‘காதலை’ வெளிப்படுத்தி உள்ளார்.
 

 
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திருமதி. வானதி சீனிவாசன் சிறிது திகைத்துள்ளார். பின்னர், அவரைச் சுற்றியிருந்த பாஜக தொண்டர்கள், அந்த இளைஞரிடம் இருந்து வானதி சீனிவாசனை மீட்டுச் சென்றனர்.
 
இந்நிலையில் இது குறித்து வானதி சீனிவாசன், தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பதிவு கீழே:
 
இன்று ஊடகங்கள் சிலவற்றில் வந்துள்ள 'ஒரு ஆடவனின் அநாகரிக நடத்தைப்' பற்றிய செய்திகள்... நிறைய அக்கறையான விசாரிப்புகள்..
 
அரசியலுக்கும், பொது வாழ்வுக்கும் வரும் நம் சகோதரிகள் இது போன்ற இன்னும் என்ன விதமான அவமானங்களை எல்லாம் தாங்கி, தாண்டி வந்து சமூக மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலான பணி.
 
இதற்குரிய வலுவை, மன தைரியத்தை இறைவன் என் சகோதரிகளுக்கு அளிக்க வேண்டிக்கொள்கிறேன்.
 
"சமுதாயத்தில் இந்த நிலையில் இருக்கும் வானதிக்கே இந்த நிலைமையா? நாமெல்லாம் அரசியலில் நிலைக்க முடியுமா?" 'பொது வாழ்க்கையில் அச்சமின்றி செயல்பட முடியுமா' என்ற தயக்கம் பெண்களுக்கு என்றுமே வந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.
 
ஒரு ஆடவனின் அநாகரீக செயலை வைத்து சமுதாயத்தை நிர்ணயிக்க கூடாது என்று ஆயிரம் சகோதரர்கள் நலம் விசாரித்து அக்கறை கொண்டதை வைத்து புரிந்துக் கொள்கிறேன்.
 
என்றும் எனக்கு உள உறுதியாக இருக்கும் முண்டாசு கவிஞனின் வரிகள்
 
"தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி -
கொடும் கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.