திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (12:40 IST)

டார்ச் லைட் சின்னம்: ஒதுங்கிய எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி; எட்டிப்பிடிப்பாரா கமல்?

2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி கூறியுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. முன்னதாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த முறை சட்டமன்ற தேர்தலுக்கும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கோரிய நிலையில் டார்ச் லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
தங்களுக்கு டார்ச்லைட் சின்னம் வழங்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் தங்களுக்கு டார்ச் லைட் சின்னத்தை விட்டுக்கொடுக்கும்படி பேசியதாகவும் தாங்கள் அதை கொடுக்க மறுத்துவிட்டதாகவும் எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் எம்ஜிஆர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஆனால் தாங்கள் சட்டரீதியாகவே சின்னத்தை பெற முயன்று வருவதாகவும், எப்படி சின்னம் கிடைத்தது என கேட்கவே எம்ஜிஆர் மக்கள் கட்சியிடம் பேசியதாகவும், வேறு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் கமல்ஹாசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி கூறியுள்ளது. எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் வகையில் புதிய சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்  எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன். இதனால் அந்த (டார்ச் லைட்) சின்னம் கமல் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.