காசு திரும்ப வருமா... இல்ல கட்சி நிதினு லவட்டிருவாங்களா? கலக்கத்தில் தேமுதிகவினர்!
விருப்ப மனுக்காக கொடுத்த காசு திரும்ப கிடைக்குமா அல்ல கட்சி நிதியாகிவிடுமா என்ற சந்தேகத்தில் தேமுதிகவினர் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தரப்பில் விருப்ப மனு விநியோகம் துவங்கியது.
ஆனால், வருகிற உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதாவது மக்கள் இம்மூவரையும் தேர்ந்தெடுக்க முடியாது. வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க முடியும்.
இந்த அறிவிப்பை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக அதிமுக, தனது கட்சியில் மேயர், நகராட்சி, பேரூராட்சி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் தங்களது பணத்தை திரும்ப பெறலாம் என அறிவித்தது.
அதிமுகவை தொடர்ந்து தற்போது திமுகவும் அம்மூன்று பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் அந்த காசு திரும்ப வருமா அல்லது கட்சி நிதியாகிவிடுமா என்ற சந்தேகத்தில் உள்ளனராம்.
தேமுதிக நிதி நெருக்கடியில் உள்ளதால் இந்த விருப்ப மனு வாங்க கொடுக்கப்பட்ட பணத்தை உரியவர்களுக்கு திரும்பி கொடுக்காமல் கட்சி நிதி என எடுத்துக்கொள்வார்களோ என்ற அச்சத்தில் காசு கொடுத்தவர்கள் உள்ளார்களாம்.
ஆனால், எப்படியும் அந்த பணம் திருப்பி கொடுக்கப்படும் என சில நம்பிக்கைக்குரியவர்கள் பணம் கொடுத்தவர்களிடம் கூறியுள்ளார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.