புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 6 நவம்பர் 2019 (16:44 IST)

கமல் கட்சியை கைக்கழுவியது ஏன்? கட்சி தாவிய ராஜேந்திரன் பேட்டி!

அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது ஏன் என பதில் அளித்துள்ளார். 
 
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் பெரும்பாலானோர் கருதினர். குறிப்பாக கமல்ஹாசன் கட்சி மீது இளைஞர்களுக்கு அபார நம்பிக்கை எழுந்தது. இதனால்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மாணவர்கள், இளைஞர்கள் அந்த கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர்.
 
ஆனால் கமல் கட்சி வேட்பாலர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர். இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வு அடைந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக கமல் கட்சியில் இருந்து மூன்று பேர் இன்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். 
இந்த 3 பேரில் ஒருவரான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பாராளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன், மநீம-ல் இருந்து ஏன் விலகினேன் என்ற காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
மக்கள் நீதி மய்யத்தில் எனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கமல் மீது இன்றும் மரியாதை வைத்திருப்பவன் நான். ஆகையால், கமல் மீது அதிருப்தி ஏற்பட்டதால் இந்த முடிவை எடுக்கவில்லை.
இப்போது எனக்கு 61 வயது ஆகிறது, இன்னும் ஆக்டிவாக இயங்க முடியும் என்றால் 5 வருடமோ 6 வருடமோதான்.  35 வயதுடையவர்களோ, 40 வயதுடையவர்களோ கமல்ஹாசன் பின்னால் இருந்து செயல்படலாம். 
 
நம்மை சார்ந்துள்ள மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும். மற்றபடி கமல் மீதோ மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மீதோ நான் எந்த குறையையும் கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.