டெல்லியில் இருந்து வரும் ஆபத்து; அபாயத்தில் சென்னை: பகீர் கிளப்பிய வெதர்மேன்!
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு சென்னைக்கு எப்படி வரும் என்பதை புகைப்படம் மூலமாக விளக்கியுள்ளார் தமிழக வெதர்மேன்.
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வங்காள விரிகுடா கடல் மூலமாக தமிழகத்திர்கு குறிப்பாக சென்னைக்கு பரவி வருவதாக, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இதனால் சென்னை அருகேயுள்ள மணலியில் காற்று மாசு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக வங்காள விரிகுடா பகுதிக்கு வருகிறது.
பின்னர் வங்காள விரிகுடாவில் இருந்து கடற்காற்று மூலமாக சென்னை உள்பட பல பகுதிகளுக்கும் பரவி வருகிறது. மணலியில் காற்றின் மாசு கடந்த சில நாட்களாக அதிகமாகி இருப்பதற்கு காரணம் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து காற்று மாசுதான் என குறிப்பிட்டிருந்தார்.
இவரை தொடர்ந்து தற்போது டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு எப்படி மாசுபட்ட புகை வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கி இருக்கிறார். டெல்லி மற்றும் வட இந்தியாவில் இருக்கும் புகை தமிழகத்திற்கு அழைத்து வரப்படும். நான் கொடுத்திருக்கும் புகைப்படங்கள்தான் அதற்கு ஆதாரம். காற்று எப்படி செல்லும் என்பதற்காக திசையை குறிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.