1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2017 (17:52 IST)

உங்களை சந்திக்கும் மோடி, அதிமுக எம்.பி.க்களை சந்திக்காதது ஏன்? - பதிலளிக்கும் நிர்மலா சீதாராமன்

முதல்வரைப் பார்க்காமல் எம்.பி.க்களைப் பார்க்க வேண்டுமா? எனக்குப் புரியவில்லை என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


 

இது குறித்து ’தி இந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், தமிழக அரசை பா.ஜ.க. மறைமுகமாக இயக்குவதாக செய்திகள் வெளியாகின்றனவே என்ற கேள்விக்கு, “ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது. இங்கிருக்கும் அரசை நாங்கள் ஏன் இயக்க வேண்டும்? இந்த முறையைப் பிரதமர் ஏற்கமாட்டார்.

அவரும் ஒரு காலத்தில் மாநில முதல்வராக இருந்திருக்கிறார். அப்போது மத்திய அரசு கொடுத்த அழுத்தங்களால் பாதிக்கப்பட்டது அவருக்கும் புரியும். அதனால் மாநில முதல்வராக இருந்தவருக்கு, மற்றொரு மாநிலத்தைஇயக்கும் கொள்கையில் நம்பிக்கையில்லை” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், தமிழக முதல்வரால், மோடியை உடனே சந்திக்க முடிகிறது. பலமுறை முயற்சித்தும் அதிமுக எம்.பி.க்களால் அவரைச் சந்திக்க முடியவில்லையே? என்ற கேள்விக்கு, ”ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் சார்பில் வரும் முதல்வரைச் சந்திக்கவில்லை என்றால் அரசியலமைப்புப்படி தவறு என்பீர்கள். பாராளுமன்றத்துக்கு வரும் எம்.பி.க்கள், அங்கேயே மோடியைச் சந்திக்கலாமே?

சரி சில சமயங்களில் சந்திக்க முடியாமல் போகிறது. முதலமைச்சரும், எம்.பி.க்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே. என்ன குற்றம் சொல்கிறீர்கள்? முதல்வரைப் பார்க்காமல் எம்.பி.க்களைப் பார்க்க வேண்டுமா? எனக்குப் புரியவில்லை. முடிந்தால் இவர்களையும் பார்த்திருப்பார். முடியவில்லை. இது என்ன மாதிரியான விவாதம்?” என்று கூறியுள்ளார்.