1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (22:36 IST)

ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் போவது எப்போது?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 

 
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில், ராம்குமார் சிறையிலேயே மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ராம்குமாரின் உடல் தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
 
ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்யும்போது தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டுமென ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் சார்பில், திங்கட்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த மனுவை விசாரிப்பதற்காக திங்கட்கிழமை பிரேதப் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு, அரசு நியமித்த மருத்துவர் குழுவுடன் கூடுதலாக ஒரு மருத்துவரை நியமித்து பிரேதப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனால், நேற்று செவ்வாய்க் கிழமையன்று பிரேதப் பரிசோதனை நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராம்குமாரின் தந்தையின் சார்பில் மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
அதில், தங்களது சார்பில் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் பிரேதப் பரிசோதனைக் குழுவில் இடம்பெற வேண்டுமென கோரப்பட்டது. இதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
 
மனுதாரரின் கோரிக்கைக்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை அனுமதித்தால், எல்லோரும் இதே போல கோரிக்கை விடுக்கக்கூடும் என அரசுத் தரப்பு கூறியது.
 
சிறையில் மரணம் நிகழ்ந்திருப்பதால், இந்த மரணத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமென நீதிபதிகள் கூறினார். ஆனால், மனு மீது முடிவெடுப்பதில் இரு நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
இதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர். அதுவரை ராம்குமார் உடலைப் பாதுகாக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், ராம்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதில் மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது.