1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (12:23 IST)

தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடுக்கு சென்றால் என்னவாகும்??

ஓபிஎஸ் மேல்முறையீடு சென்றாலும், இபிஎஸ்-க்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்த அதிமுக செய்தித்தொடர்பாளர்.


கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ல் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கிறார். அதேசமயம் கட்சியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதும் செல்லுபடியாகும் வாய்ப்பு என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஒற்றைத் தலைமை இருக்கும் போதுதான் அதிமுக சிறப்பாக செயல்படும். ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றால், எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை மீண்டும் எடுத்து வைப்போம். ஓபிஎஸ் மேல்முறையீடு சென்றாலும், இபிஎஸ்-க்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.