சென்னைப் போலீஸுக்கு இதைவிட வேறு அவமானம் என்ன? - மு.க.ஸ்டாலின் குட்டு


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 27 ஜூன் 2016 (15:50 IST)
ஓய்வு பெற்ற சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே. ராகவன் எழுதியுள்ளள கட்டுரையில், “சென்னைப் போலீஸுக்கும், ரயில்வே போலீஸுக்கும் இதைவிட வேறு அவமானம் இருக்க முடியாது என்று கூறியுள்ளதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார்.
 
 
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென் பொறியாளரான இளம் பெண் சுவாதியின் இல்லத்திற்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, ஆறுதலும் கூறினேன். அந்த குடும்பம் நிலை குலைந்து இருப்பது கண்டு மனம் வேதனைப்பட்டேன்.
 
காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் நாள்தோறும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை கூலிப்படைகளால் நடத்தப்பட்டவையாகும்.
 
கைது செய்யப்பட்டவர்களோ அல்லது அந்த கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று நீதிமன்றங்களில் ஆஜரானவர்களோ கூலிப்படையைச் சேர்ந்தவர்களே! இதில் தலைநகரம் சென்னையில் நடந்துவரும் படுகொடூரமான படுகொலைகளும் அவை தொடர்பான செய்திகளும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளன.
மே மாதத்தில் ஜெயலலிதா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மே 30ஆம் தேதியன்று எழும்பூரில் வசித்து வந்த புற்றுநோய் நிபுணரான டாக்டர் ரோகிணி என்பவர் கை-கால்கள் கட்டிப்போடப்பட்டு கொல்லப்பட்டார். ஜூன் 5-ம் தேதி சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் கொல்லப் பட்டார்.
 
ஜூன் 7-ம் தேதி ஆர்டிஐ செயல்பாட்டாளர் பரஸ்மால் ஜெயின் சூளை அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஜூன் 14-ல், குரோம்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி கொல்லப் பட்டார். ஜூன்16-ல் புழல் காவாங்கரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அகில்நாத்(36) கொல்லப்பட்டார்.
 
ஜூன் 19-ல் நகைக்காக பூந்தமல்லி பகுதியில் தேன்மொழி, அவரது மகள் கொல்லப்பட்டனர். ஜூன் 22-ல் விசாயர்பாடி மெகசின்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவி(42) பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப் பட்டார். ஜூன் 24 தேதியன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி.துறையைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண், சக பயணிகள் முன்னிலையில் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நாளில், ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டில் தாய் மற்றும் 3 மகள்கள் என 4 பேர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த அதிர்ச்சி செய்தியும் வெளியானது. இதை தவிர சென்னை அடுத்த, கேளம்பாக்கத்தில் மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
 
தலைநகர் சென்னையில் நிகழும் பயங்கரங்கள் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்தபடியே உள்ளன. காதல் திருமணம் செய்துகொண்டு நாமக்கல்லில் வசித்து வந்த சுமதி என்ற பெண்மணி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஒசூரில் பெங்களூரைச் சேர்ந்த கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் தாக்கியதில் முனுசாமி என்ற தலைமைக்காவலர் கொல்லப்பட்டார்.
 
அதே ஓசூரைச் சேர்ந்த குவளை செழியன் என்ற நில அளவையாளர் கடத்திச் செல்லப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஓசூர் டைட்டான் டவுன்சிப்பில் வசந்தா என்ற பெண், ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி கோபால் சவுத்ரி, ஓசூர் விகாஸ்நகரில் தீபா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
வளர்ச்சி பெற்று வரும் தொழில்நகரமான ஓசூரில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால் அங்கு வாழும் மக்கள் அச்சத்தில் தவிப்பதுடன், தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் குடியேற முயற்சித்து வருகின்றனர். புதிதாகத் தொழில் முதலீடு செய்ய நினைப்பவர்களும் ஓசூர் என்றால் தயக்கம் காட்டும் நிலை உருவாகியுள்ளது.
 
 
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து காசிராஜன், ராஜலிங்கம் ஆகிய இரு இளைஞர்கள் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொலை சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்து வந்துள்ளன
 
இந்தக் கொலைகளுக்கு முன்விரோதம், குடும்பப் பிரச்சினைகள், சாதிப்பின்னணி, கட்டபஞ்சாயத்து, பணத்தகராறு, நிலப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இவற்றில் பல கொலைகளுக்கு கூலிப்படையினர் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. ஏன் காவல்துறைக்கே தெரிந்த உண்மை. உதாரணமாக சென்னையில் கொல்லப்பட்ட வழக்கறிஞர் முருகன் உள்ளிட்ட சில கொலை வழக்குகளில் கைதாகியிருப்பவர்களே, கூலிப்படை மூலம்தான் இந்தக் கொலையைச் செய்தோம் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.
 
அமைதிப்பூங்கா என்று தமிழகமும், ஸ்காட்லாண்டு யார்டு என்று தமிழக போலீசும் பெயர் பெற்றிருந்ததெல்லாம் பழங்கதையாகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளிலேயே தமிழகத்தில் மிக அதிக அளவில் கொலைகளும் கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. அது இந்த முறையும் தொடருகிறது. டெல்லியில் நிர்பயா என்ற மாணவி பாலியல் கொடுமைக்குள்ளாகி மரணமடைந்த நிலையில், நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
அப்போது, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக “13 அம்சத் திட்டத்தை” அறிவித்தார். அவை வெற்று அறிவிப்பாகவே இருப்பதால் பெண்களின் பாதுகாப்பில் தமிழகத்திலும் சரி, சென்னை மாநகரத்திலும் சரி எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த சூழ்நிலையில் “அண்மையில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களில் கூலிப்படைகள் ஈடுபட்டுள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளிவந்துள்ள போதும் உண்மையில் அச்சம்பவங்களில் கூலிப்படையினர் ஈடுபடவில்லை” என்று முதலமைச்சர் ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
 
முதலமைச்சரின் கருத்துக்கு வக்காலத்து வாங்குவது போல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரும் ஜூன் 25 ஆம் தேதியன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் “சென்னை நகரில் நடந்துள்ள கொலை சம்பவங்களில் கூலிப்படையினருக்கு எந்தவித தொடர்பும் இல்லை” என்று கூறியிருப்பது அதைவிட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பொறுப்புள்ள பதவியிலிருக்கும் போஸீஸ் கமிஷனர் இப்படிக் கூறியிருப்பது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை விட இதில் கூலிப்படையினர் யாரும் சம்பந்தப்படவில்லை என்று வக்காலத்து வாங்குவதிலேயே அதிக ஆர்வம் இருப்பது புலனாகிறது.
 
நேற்றைக்கு “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கிலப் பத்திரிக்கையில் ஓய்வு பெற்ற சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே. ராகவன் இளம்பெண் ஸ்வாதி கொலை பற்றி “No country for young women?” என்ற தலைப்பில் எழுதியுள்ளள கட்டுரையில், “சென்னைப் போலீஸுக்கும், ரயில்வே போலீஸுக்கும் இதைவிட வேறு அவமானம் இருக்க முடியாது. சென்னை போலீஸ் மீது படிந்துள்ள கறை இது” என்றே இடித்துரைத்துள்ளார்.
 
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளே சென்னை மாநகரத்தில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்று கொதித்து எழும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாகியிருக்கிறது. ஆகவே இனியாவது காவல்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதலமைச்சரும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரும் சென்னை மற்றும் தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
 
தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு பரிபூரண சுதந்திரம் அளித்து ரவுடியிஸத்தை, கூலிப்படைகளை, தயவு தாட்சயன்மின்றி அடக்கி ஒடுக்கி தமிழக மக்கள் “அப்பாடா, பாதுகாப்பாக இருக்கிறோம்” என்ற நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே போல் சுவாதி கொலையில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 இதில் மேலும் படிக்கவும் :