ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:38 IST)

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த தயாராகும் அன்புமணி ராமதாஸ்!

அவரச சட்டம் உடனடியாக கொண்டுவராவிட்டால், தடையை மீறி வரும் 26ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சுவிரட்டு நடத்தப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.


 

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய அரசு அவசர சட்டத்திருத்தம் கொண்டு வரக்கோரி பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் டெல்லி சென்றார்.

ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எது நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அது இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் செயல்படாத தன்மைக்கு எதிராக இளைஞர்களும், பாணவர்களும் லட்சக்கணக்கில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தன்னெழுச்சியாக குவிந்து  மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டம் வெல்ல வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறிவந்த மத்திய, மாநில அரசுகள் கடைசி நேரத்தில் நம்பிக்கை துரோகம் செய்ததைக் கண்டித்து தான், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தை போராட்டத்தை இப்போது தான் காண முடிகிறது. போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பெருமளவில் கலந்து கொண்டிருப்பது தமிழர்களின் போராட்ட குணத்தைக் காட்டுகிறது.

மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க மனது துடிக்கிறது. ஆனால், அரசியல் கட்சியினர் தங்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்றும், அவ்வாறு பங்கேற்கச் சென்ற தலைவர்களை திருப்பி அனுப்பியதாலும் என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு தார்மீக ஆதரவையும், பாராட்டுக்களையும் வழங்கி வருகிறேன்.

மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு  அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26-ஆம் தேதி குடியரசு நாள் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் தடையை மீறி அமைதியாக நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.