திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (14:59 IST)

ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது- முதல்வர் ஸ்டாலின்

இந்தித் திணிப்பை எதிர்த்து,சேலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தங்கவேலு(85) இன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு இரங்கல்தெரிவித்து, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  ''அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது!'' எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்!

இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்!

ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது!

போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். 'இந்தியைத் திணிக்காதே' எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை.

தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.