1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 31 அக்டோபர் 2016 (14:02 IST)

ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வைகோ விலகலா?

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தன. அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 

 
பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை கூட்டியக்க தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் செயப்ல்படும் என்று அறிவித்தனர்.
 
மேலும், ”தமிழகத்தை அதிமுக ஊழலில் திளைக்க வைத்த திமுக வும் அதன் தலைவரின் மொத்த குடும்பமும் ஊழலில் சிக்கி தவிக்கிறது. ஊழல் நாணயத்தின் இரு பக்கங்கள் அதிமுக, திமுக. இதிலிருந்து விடுபடவே மக்கள் நல கூட்டியக்கம்” எனவும் வைகோ தெரிவித்தார்.
 
அதன்பிறகு, பொதுமக்கள் பிரச்சனைகள் அனைத்திலும் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து, மக்கள் நல கூட்டியக்கமாக செயல்பட்டது. பின்னர், 2016 சட்டமன்ற தேர்தலில் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுத்தது.
 
பின்னர், இந்த கூட்டணியில் தேமுதிக, தமாகா ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இந்த கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதனையடுத்து, இந்த கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா ஆகியவை விலகின.
 
இந்நிலையில், திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் மற்ற கட்சிகள் பங்கேற்காமல் தடுக்கும் பணியில் வைகோ ஈடுபட்டதாகவும், அவர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே வைகோ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
ஆனால், இந்த தகவலை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மறுத்துள்ளனர். இது குறித்து கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறுகையில், “இது தவறான தகவல். அப்படி என்றால் அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்து இருப்பார்” என்றார்.
 
மேலும், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறும்போது, ’தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணியாக தாங்கள் செயல்படுவதாகவும், மற்ற காலங்களில் மக்கள் நலக்கூட்டியக்கமாக செயல்படுவதாகவும், வைகோ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் நீடிப்பதாகவும்’ தெரிவித்தார்.