1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (14:46 IST)

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறியதை அடுத்து அந்த பதவிக்கு அடுத்ததாக இளவரசியின் மகன் விவேக் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 
 
சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைக்க தனது அக்கா மகன் தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
 
தினகரன் அதன் பின்னர் சசிகலாவின் பேச்சை மீறி ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டதாகவும் இதனால் அவர் மீது சசிகலா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
 
இந்த இடைவெளியில் அதிமுக அமைச்சர்களும் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் அதிமுக தலைமை இல்லாமல் தள்ளாடுகிறது. இந்நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனை துணை பொதுச்செயலாளராக நியமிக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
விவேக்கும் அதற்காக கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 30 எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவை விவேக் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
 
விவேக்கிற்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிச்சாமி யாராக இருந்தாலும் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கினால் அவர்கள் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.