வேட்புமனு நிராகரிப்பு: மோடியை நேரடியாக தொடர்பு கொண்ட விஷால்
சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நடிகர் விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் இருந்து விஷால் தனது அண்ணாநகர் வீட்டில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். தலைமை தேர்தல் அதிகாரியை சந்திப்பாரா? அல்லது நீதிமன்றம் செல்வாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை
இந்த நிலையில் விஷால் தனது டுவிட்டரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனையின்போது என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்கு உங்களிடம் இருந்து நீதி கிடைக்கும் என்று நம்புவதாக ஒரு கருத்தை பதிவு செய்து அதை பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளார். பிரதமர் மட்டுமின்றி குடியரசு தலைவருக்கும் அவர் டேக் செய்துள்ளார்.
தேர்தல் கமிஷன் எடுத்த முடிவில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி எப்படி தலையிட முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஷால் நீதிமன்றம் செல்வது ஒன்றே வழி என்றும், ஆனாலும் நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரணை செய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.