1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (13:21 IST)

ஓட்டலில் பாஸ்தா சாப்பிட்ட பெண் உயிரிழப்பு?- விழுப்புரத்தில் அதிர்ச்சி!

Pasta
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த காதல் ஜோடி இருவர் சமீபத்தில் திருமணம் செய்த நிலையில் ஓட்டலில் பாஸ்தா சாப்பிட்டதால் பெண் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த பழனியின் மகள் பிரதீபா. இவரும் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் வீட்டார் எதிர்த்ததால் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியே சுற்றுலா சென்ற காதல் தம்பதியர் மாலை வீடு திரும்பும்போது திருவாமாத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுள்ளனர். பின்னர் வீடு திரும்பியதும் பிரதீபா வாந்தி எடுத்துள்ளார். அதை தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஓட்டலில் கெட்டுப்போன பாஸ்தாவை கொடுத்ததே பிரதீபா மரணத்திற்கு காரணம் என அவரது கணவர் விஜயக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேசமயம் பிரதீபாவின் தந்தை பழனி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காசல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே விழுப்புரம் நெடுஞ்சாலை உணவகங்களில் உணவுத்தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் உணவின் தரம் குறித்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள சில உணவு பொருட்களை ஆய்வுக்காக ஆய்வகம் அனுப்பியுள்ளனர்.