80 பெண்களுடன் மதுபோதையில் குத்தாட்டம்: உதவி இயக்குனர் உள்பட 15 பேர் கைது!
விழுப்புரம் அருகே உள்ள ஒரு முந்திரி காட்டில் மதுபோதையில் 80 இளம்பெண்களுடன் குத்தாட்டம் போட்ட 15 பேர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐடி ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் ஒரு உதவி இயக்குனரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் என்ற பகுதியில் உள்ள முந்திரி தோப்புக்குள் மதுபோதையில் இளம்பெண்களுடன் சிலர் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். "அரோ டிஜே நைட்" என்ற பெயரில் மதுபோதையில் ஆட்டம் போட்ட வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 80 ஜோடிகளை போலீஸார் சுற்றிவளைத்தனர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த யுவராஜ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 'இந்த பகுதி புதுவைக்கு உட்பட்ட பகுதி என நினைத்து நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறினார். இதனையடுத்து யுவராஜ் உள்பட 15 பேர்களை போலீசார் கைது செய்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள், கஞ்சா முதலியவற்றை கைப்பற்றினர். மேலும் இந்த நடன நிகழ்ச்சிக்கு வந்திருந்த 80 பெண்களை அவர்களுடைய எதிர்காலம் கருதி எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரிடம் ரூ.1000 கட்டணமாக யுவராஜ் பெற்றுள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான உதவி இயக்குனர் தான் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஒரு நடனக்காட்சி இருப்பதாகவும், அந்த காட்சியை அமைக்க இங்கு நடக்கும் நடனக்காட்சியை பார்வையிட வந்ததாகவும் கூறினார். ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த போலீசார் அவரையும் கைது செய்தனர். இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் தான் பாலியல் குற்றங்கள் பெருக காரணம் என்பதால் இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்