1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (13:02 IST)

விஜயகாந்த் எஸ்கேப்: வேட்பாளர்களுக்கு பணம் தர மறுப்பு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியுற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு தலா 10 லட்சம் தருவதாக விஜயகாந்த் உறுதி அளித்ததாகவும், தற்போது பணம் எல்லாம் தர முடியாது என விஜயகாந்த் கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன.


 
 
மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தபோது அக்கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேட்பாளர்கள் பலர் கட்சியிடம் முறையிட்டனர். தேர்தலில் தோற்றால் பணம் தருவதாக விஜயகாந்த் அவர்களுக்கு வாக்குறுதியளித்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தேர்தலில் படுதோல்வியடைந்த தேமுதிக தோல்வி குறித்து கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்கள் தாங்கள் சொத்துக்களை அடகு வைத்து தேர்தலை சந்தித்ததாகவும், தற்போது மிகவும் கஷ்டப்படுவதாக கூறியதை அடுத்து ஆளுக்கு 10 லட்சம் தருவதாக விஜயகாந்த் வாக்குறுதி அளித்ததாக தகவல்கள் வந்தது.
 
இதனையடுத்து பணம் தர சொன்ன தேதி தாண்டியும் வேட்பாளர்களுக்கு பணம் செட்டில் ஆகவில்லை. இதனால் பல வழிகளிலும் விஜயகாந்தை தொடர்புகொள்ள வேட்பாளர்கள் முயற்சி செய்தனர். சுதீஷ் மற்றும் தலைமை கழகம் மூலமாக தகவல் அனுப்பியும் எந்தவித பதிலும் வரவில்லை என பேசப்படுகிறது.
 
இந்நிலையில், பணம் தொடர்பாக யாரும் தலைமை கழகத்தையோ, விஜயகாந்தையோ தொடர்பு கொள்ள கூடாது எனவும், தேர்தலில் வேட்பாளர்கள் யாரும் பணம் செலவு செய்யவில்லை, பிறகு எதற்கு பணம் தர வேண்டும் என விஜயகாந்த் கூறியதாக தலைமை கழக நிர்வாகிகள் தோல்வியுற்ற வேட்பாளர்களிடம் கூறியதாக தற்போது தகவல்கள் கசிகின்றன.