ஜூஸ் கடை வழியாக ஓட்டை போட்டு அடகு கடை கொள்ளை! – வேலூரில் அதிர்ச்சி!
வேலூரில் அடகு கடை ஒன்றை வேறு கடை வழியாக வந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் மேல்பாடியை சேர்ந்தவர் அனில்குமார். இவர் சித்தூர் செல்லும் சாலையில் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த கடையை ஒட்டி குளிர்பான கடை மற்றும் ஏடிஎம்மும் உள்ளது.
இந்த அடகு கடையை கொள்ளையடிக்க திட்டமிட்ட கொள்ளை கும்பல் ஒன்று நேற்று இரவு கடையின் பின்பக்க சுவரை துளையிட முயன்றுள்ளனர். ஆனால் கான்கிரீட் கனம் காரணமாக துளையிட முடியவில்லை.
இதனால் அடகுக்கடையை ஒட்டியிருந்த ஜூஸ் கடையின் பக்கவாட்டு சுவரியில் துளையிட்டு கடைக்குள் சென்று அங்கிருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர்.
காலையில் வந்து பார்த்தபோது அடகுக்கடை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனில்குமார் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.