1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (20:13 IST)

வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தை யாரும் பார்க்காதீர்கள் : முத்துலட்சுமி அதிரடி

சந்தன கடத்தில் வீரப்பனை மையமாக வைத்து பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி தமிழில் வெளியாகியுள்ள  ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற திரைப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தமிழில்  ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற தலைப்பில் அந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
 
இந்த படத்திற்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
என் கணவரை பற்றி பலரும் தவறுதலாக படம் எடுக்கிறார்கள். அவரது பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதே அவர்களின் நோக்கம். முன்னாள் காவல் அதிகாரி தேவாரம் என் கணவரை பல வருடங்களாக தேடினார். அவர் புத்தகம் எழுதினால் கூட அதில் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் விஜயகுமாருக்கு என்ன தெரியும்? அவர் என் கணவரை மோரில் விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்த உண்மையை அவர் சொல்ல தயாரா?
 
என் கணவர் பற்றி விஜயகுமார் தவறான தகவல் கொடுத்து வருகிறார். ஆரம்ப காலத்தில் என் கணவர் சந்தன மரம் கடத்திய போது நான் அவருடன் இருந்தேன். எனக்கு அவரைப் பற்றி தெரியும். அவர் ஏன் தலைமறைவாக இருந்தார் என்ற உண்மைகள் விரைவில் வெளிவரும். அதுவரை பொறுத்திருங்க்கள்.
 
கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் முற்றிலும் தவறானது. அதை  யாரும் பார்க்க வேண்டாம். அதேபோல், என் கணவருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்பு இருப்பது போல் என்று கூறப்படுவது தவறான தகவல்” என்று அவர் கூறினார்.