செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (09:12 IST)

ஒன்றில் உதயசூரியன்; ஒன்றில் தனிச்சின்னம் – விசிக முடிவுக்கு ஓகே சொல்லுமா திமுக ?

திமுக ஒதுக்கியுள்ள 2 தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்திலும் மற்றொன்றில் தனிச்சின்னத்திலும் போட்டியிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடத்திய திமுக அவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது. ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருப்தியடைந்தாலும் ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி திமுக வலியுறுத்தியுள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் சில சலசலப்புகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு இப்போது உதயசூரியனின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அவர்கள் கட்சிக்குள்ளாகவே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த தேர்தல்களில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட மோதிரம் சின்னத்தை இம்முறை ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ என்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். அந்தக்கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதால் மோதிரத்தை அக்கட்சிக்கே வழங்கியது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்ட ஆலோசனையில் ஒருத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் மற்றொருத் தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிடப் போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை திமுகவிடமும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்பார்த்த வரவேற்புக் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. அதனால் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்ற யோசனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.