1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (13:47 IST)

தெருவுக்கு தெரு சடலம்.! எங்கு பார்த்தாலும் மரண ஓலை..! கண்ணீரில் மூழ்கிய கிராமம்.!!

Sarayam Death
கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில், தெருவுக்கு தெரு சடலங்களை வைத்து உறவினர்கள் கதறி அழும் சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.
 
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பலர் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 
மேலும் சிலர் சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ச்சியாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் தற்போது வரை 37 பேர்  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருணாபுரம் கிராமத்தில் தெருவுக்கு தெரு மரண ஓலைகள் கேட்கின்றன. கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டு உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
 
Kallasarayam Death
மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இத்தனை உயிர்கள் பலியானதாகவும், ஆனால் கள்ளச்சாராயத்தால் உயிர் போகவில்லை என  மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உயிர்பலி அதிகரிப்புக்கு மாவட்ட நிர்வாகமே காரணம் என்றும் அவர்கள் ஆவேசம் தெரிவிக்கின்றனர்.
 
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகவும், லஞ்சம் வாங்கிக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை போலீசார் தடுக்க தவறிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது என்றும் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.