1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2023 (09:10 IST)

''கோடையில் சிறந்த சுற்றுலாத்தளம் வால்பாறை'' - சினோஜ் கட்டுரைகள்

valparai
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் இந்த வால்பாறையில் கடந்த 1846 ஆம் ஆண்டு ராமசாமி முதலியார் என்பவர் முதன் முதலாகக் காஃபியைப் பயிரிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர், 1864 ஆம் ஆண்டில் கர் நாடிக் காபி கம்பெனி, சென்னை அரசிடம் காபி பயிரிடுவதற்கு  நிலம் தரும்படி கேட்டது. இதை ஏற்று, சென்னை மாகாண அரசும் அப்போதைய விலையில் ஏக்கர் ரூ.5 என்ற விலையில் விற்றனர்.

ஆனால்,  நிலம் வாங்கிப் காபியை பயிரிட்ட அந்த நிறுவனத்திற்குப் போதிய சாகுபடி கிடைக்காததால், வாங்கிய நிலத்தை அப்படியே விற்கத் தொடங்கியது.

இதன்பின்னர், காபி மற்றும் தேயிலை பயிரிட  இப்பகுதி ஏற்றது என்று பலரும் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலையைப் பயிரிட்டனர்.

தற்போது, ஆனைமலை 56 எஸ்டேட்களில் வசிக்கும்  ஆயிரக்கணக்கான மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த தேயிலைத்தோட்டத் தொழில் உள்ளது. தற்போது  ஒரு சில எஸ்டேட்டுகளைத் தவிர பெரும்பாலும் இவை தனியார் துறையினர் வசமே உள்ளது.

மாசு மருவில்லாத பூமியின் சொர்க்கமான இந்த வால்பாறை மேற்குத்தொடர்ச்சி மலையின்  ஒரு பகுதியான பரந்துவிரிந்த ஆனைமலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிக்கு மேல்   நீண்டுயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

ஒரு சுற்றுலாத்தளத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இங்கே உள்ளது. அதனால், தினமும்  நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் இருந்து வால்பாறை 104 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சி வட்டத்திலிருந்து 64 கிமீ தொலைவிலும், கேரளா மா நிலம், எர்ணாகுளம், அதிரப்பள்ளி, வாழச்சல், மலக்கரப்பா போன்ற பகுதிகள் வழியாக வால்பாறை 11 கிமீ தொலைவில் உள்ளது.

மக்கள் பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகளில் செல்லும் வகையில் சிறப்பான சாலை வசதிகள் உள்ளன.

கோவை,திருப்பூர், சேலம், ஈரோடு, பழனி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து ஆழியாறு வழியாக  வால்பாறைக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறைக்குச் செல்லும் வழியில் ஆழியாறு,அறிவுத்திருக்கோயில், குரங்கு அருவி,காடம்பாறை அணை,  குதிரைவழிப்பாதை, 9 ஆம் நம்பர் பெண்ட்  ஆகியவறை முக்கிய பகுதிகளாக உள்ளன.

இதையடுத்து, வாட்டர்ஃபால்ஸ், எஸ்டேட், பனி மூடிய கவர்க்கல், கார்வர் மார்ஸ் என்ற மாசிதுறை சிலை,  சோலையார் மலைத்தொடரில் அமைந்துள்ள எழில் சூழ்ந்த80 அடியில் தண்ணீர் பாய்கின்ற  அதிரப்பள்ளி  நீர்விழ்ச்சி, கருமலை அண்ணை வேளாங்கண்ணி தேவாலயம்,ரொட்டிக்கடை வனச்சின்னப்பர் தேவாலயம், லோமின் பார்வைப்புள்ளி,  நல்லமுடி பூஞ்சோலை,  அக்காமலை புள்வெளி நம்பர் பாறை,சோலையாறு  சிலுவை மேடு, நீரார் அணை,பிரமாண்டமான சோலையார் அணை, புலி பள்ளத்தாக்கு, எப்போதும் மழைபொழியும் தமிழ் நாட்டின் சிரபுஞ்சியான சிறுகுன்றா, கூழாங்கல் ஆறு, ஆனைமலை கிரவுண்ட்,, கண்ணாடி மாளிகை, பாரம்பரியமிக்க மேல் நிலைப்பள்ளி, முடீஸ் கிளப் கிரவுண்ட், முடீஸ் தியேட்டர், சிஎஸ்.ஐ தேவாலயம்,நாச்சிமுத்து கிரவுண்ட், ஏசி கிரவுண்ட், வெள்ளமலை டணல், சுப்பிரமணியன் கோயில், சித்தி வினாயகர் கோயில், இஞ்சிப்பாறை பெரியாறு, போன்ற முக்கிய சுற்றுலாத்தளங்கள் உள்ளன.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமான  சுற்றுலாத்தளமாக இந்த வால்பாறை பகுதி இருக்கிறது. இது அனைவரும் தவறவிடக்கூடாத முக்கிய சுற்றுலாத்தளம் என்பதால், இம்முறை இக்கோடை விடுமுறையில்  வால்பாறையை தேர்வு செய்யுங்கள். மனமும், உடலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சிறந்த அனுபவமாகவும் அமையும்!

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்!

#சினோஜ்