வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (08:23 IST)

கலைஞர் இல்லாமல் ஒரு விடியல் எப்படி வரும்? வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னை மெரீனாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இரவு விடிய விடிய திமுக தொண்டர்கள் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் இன்று அதிகாலையில் இருந்தும் அவருக்கு அஞ்சலி செலுத்த வரும் கூட்டம் அதிகமாகி கொண்டே உள்ளது.
 
இந்த நிலையில் இன்று காலை கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த கவியரசர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: கலைஞர் இல்லாத தமிழ்நாடு என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. கலைஞர் இல்லாமல் ஒரு விடியல் தமிழ்நாட்டிற்கு எப்படி வரும்? என்று எனக்கு தோன்றவில்லை. சூரியன் இல்லாமல் ஒரு விடியல் வானத்தில் வருமா?
 
கலைஞருக்கு என் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடனை செலுத்துவதற்காக இன்று காலை இங்கு வந்துள்ளேன். தமிழக மக்கள் நன்றி மிக்கவர்கள் என்று நான் நம்புகிறேன். கலைஞருடைய புகழை பாடுவதும், அவர் லட்சியங்களை முன்னெடுத்து செல்வதும், அவர் வாழ்ந்த வாழ்வில் இருந்து புதிய தலைமுறை நற்பாடங்களை பெற்று கொள்வதும் கடமை என்று நான் கருதுகிறேன். இலக்கியங்களில், சொற்பொழிவில், செயல்களால் அவர் வாழ்வார்.
 
அவருடைய போர்க்குணம் இளைய சமுதாயத்திற்கு வரவேண்டும். அவருடன் கருத்துவேறுபாடு கொண்டவர்கள் கூட அவருடைய போர்க்குணத்தை தீராத உழைப்பில் கருத்துவேறுபாடு கொள்ள மாட்டார்கள். அவருடைய திடம், மன உறுதி தமிழ் சமுதாயத்திற்கு தொடர்ந்து வரவேண்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.